Total Pageviews

Search This Blog

தமிழில்தான் தீர்ப்பு எழுத வேண்டும் | உயர் நீதிமன்ற மதுரை

கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுத அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்கு உள்பட்ட கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் தாய்மொழி தமிழ் அல்லாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத அனுமதித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் 1994-இல் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.


தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு முரணானது என்பதால், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சோலைசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்குரைஞர் ரத்தினம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்புகள் எழுத வேண்டும் என உத்தரவிட்டது.


1950-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன சட்டத்தின் பாகம் 17-இல் மைய ஆட்சி மொழி மற்றும் மாநில ஆட்சி மொழிகள் பற்றி 343 மற்றும் 345 ஆகிய பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரிவு 345-இல் மாநில சட்டப்பேரவைகளுக்கு தங்கள் ஆட்சி மொழியை சட்டம் இயற்றி நிர்ணயிக்கும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது.


அதன்படி, தமிழக சட்டப்பேரவை 1956-இல் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் கீழ் மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ் ஆகியது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ்மொழி அப்போது ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதனால் 1976-இல் ஆட்சிமொழிச் சட்டத்தில் இரு முக்கிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.


அந்த வகையில், 1956-ஆம் ஆண்டு சட்டத்தில் 4-ஏ, 4-பி என முக்கியப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதில் 4-ஏ பிரிவின் படி உயர்நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட எல்லா கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளிலும் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும். பிரிவு 4-பி பிரிவின்படி கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் தமிழில் தான் தீர்ப்பு கூற வேண்டும்.


இந்த பிரிவுகள் அரசியல் சட்டத்துக்கு முரணானவை என வழக்குரைஞர் ரங்கா என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கீழமை நீதிமன்ற நீதிபதிகள், தங்களுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு கேட்டதையடுத்து, உயர் நீதிமன்ற நிர்வாகம் தொடர்பான முழு நீதிபதிகள் அமர்வு கூடி 2 விஷயங்கள் குறித்து ஆராய்ந்தது.


எல்லா சட்டங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்ற அடிப்படையில் ஆங்கிலத்திலும் நீதிபதிகள் தீர்ப்பு எழுதலாம் என பொதுவான ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின் 4-ஏ மற்றும் 4-பி பிரிவுகள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, அதன் வரையறைக்கு உள்பட்டே உயர் நீதிமன்ற நிர்வாகம் முடிவு எடுக்க முடியும். தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் வசதிக்காக 4-பி பிரிவில் மூன்று விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 2-ஆவது விதிவிலக்காக, சில மாதிரியான சூழ்நிலைகளில் குறிப்பிட்ட காலவரையறைக்கு உள்பட்டு குறிப்பிட்ட ஒரு நீதிபதிக்கோ அல்லது ஒரு வகையைச் சேர்ந்த குறிப்பிட்ட நீதிபதிகளுக்கோ விதிவிலக்கு அளிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் காலவரையறை அளிக்கவில்லை. இவ்வாறு காலவரம்பு இன்றி விதிவிலக்கு அளித்தது சட்டத்துக்கு முரணானது.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஊழியர்கள் தமிழகத்தில் பணியாற்ற நேர்ந்தால் அவர்கள் மாநில அரசின் சார்நிலை பணி விதிகள் 12 (ஏ) (பி)-ன்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எனவே, தமிழ் மொழி அல்லாத பணியாளர்கள் தமிழை கற்க வழிவகை உள்ளது.


மேலும், உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு திரட்டு என்ற சட்டப்பத்திரிகை நடத்துகிறது. அதில் தமிழ் மொழியில் அனைத்து தீர்ப்புகளையும் காண முடியும். எனவே புத்தகம் கிடைக்கவில்லை என்று கூறவும் முடியாது. ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கலாம் என காலவரையறை இன்றி அனுமதித்தது தவறு. சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers